எம் வரலாற்றைக்கையிலேந்தினேன்!
எம் வரலாற்றைக்கையிலேந்தினேன் ஓர் வரலாற்று நாவலாய்.அன்பு நண்பர் ‘பாஸ்கரன்’ அண்ணாவால் ‘மடிஷன்,விஸ்கொன்ஷனில்’ கிடைக்கப்பெற்ற பொக்கிஷம் அது.அது என்கைகளில் தவழ்ந்தபோது;எம்மண்ணின் வாசம்போல அத்தனை உணர்வுகள் என்னைக்கட்டிப்போட்டன. எம்மண்மீதுகொண்ட அன்பால்,எம் வரலாற்றை இயன்றவரை ‘மெய்யெது’என ஆய்வுசெய்து,அவரது இரண்டு வருட கடின உழைப்பின் விதைப்பு ‘இணையிலான்’எனும் பொக்கிஷமாகி,உயிர்ப்புடன் “எம்மோடும்,இனிவரும் எம் சந்ததியோடும் வாழும்”என்பதே காலத்தின் கட்டாயம். ‘எப்படியெல்லாம் நாம் வாழ்த்திருக்கின்றோம்?’என்பதற்கு இந்த வரலாற்று நாவலை உணர்வுடனும், எம்மொழியின் உயிர்ப்புடனும் கதைசொல்லி வடித்திருக்கும் வட்டார வழக்கு எம்மை வியக்க வைத்தது.எம் கைகளை ஒன்றாகப்பற்றி அன்பைப்பரிமாறும் பாங்குபோல; அவரது படைப்பு,இன்னும் விசாலமாய்,மெய்ப்படப்பரந்து,எம் வரலாறோடு ஒன்றிப்பிணைந்து பயணிக்கின்றது.
மெய்மையை எழுத்தாக்கி உருவான இந்த பொக்கிஷப்பேழையை வாசித்து முடித்தபோது,பாறைகளுடன் ஊடுருவிப்பாய்ந்துவிழும் நீர்வீழ்ச்சிபோல
என் உணர்வலைகள் பொங்கி எழுந்து,
இமைகளின் அணைக்கட்டுக்களை உடைத்து
விழிகளும் பன்னீர்த்திரையானது.இதுவே ; இப்
பொக்கிஷத்தின் வெற்றி.
“எமக்கென ஒரு வரலாறு உண்டு.
அவ்வரலாற்றை முழுமையாகக்கற்றுத்தெரிந்து கொண்டவர் எம்மில் எத்தனைபேர்?”என்ற கேள்வி நிச்சயமாக இன்றுவரையிலும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.இதனை இப்படியும் கூறலாம் ;”வரலாறுகள் சரியாகப் பதியப்படவில்லையே? அதனால்,எது சரி,எது பிழையெனத்தடுமாறுவதாலும்,எது மெய்யென
நம்பமுடியாததும் முக்கிய காரணம்.
வாதப்பிரதிவாதமும்,காலத்திற்கேற்றாற்போல
மனசைக்கார்மேகமாக்கிக்கட்டிப்போட்டு
விடுகின்றது.
அந்த மனசுக்குள் இருந்து அகழ்ந்து எடுத்து ஈழத்தின் வரலாற்றுத்தரவுகளோடு இணுவிலான் சிகாகோ பாஸ்கர்
எழுதப்புறப்பட்டார்.
எம்வரலாற்றை மெய்ப்பட எழுதவேண்டும்
என்பதற்காகவே,பெரும்பாலான வரலாற்றுப்புத்தகங்கள் அனைத்தையும் இரண்டு வருடங்களாகப்பரப்பி விரித்து, வாசித்து முடித்திருப்பார் என்பதை எம்வரலாற்று வலிகளைச்சுமந்த
வரிகளைப்படித்துக்கொண்டிருக்கும்போதே
உணர்ந்தேன் நான்.
சடங்குகளின் வாசல்களில் நின்றபடி நம்மவர் நினைவுகளை மீட்டெடுப்பது என்பது நித்தம் நிகழ்வது.அப்போதெல்லாம் அவரவர் வாழ்ந்து
அனுபவித்த மண்ணின் எச்சங்கள் தொட்டு,
பிரசித்திபெற்ற கோயில்கள் என அனைத்துமே
பகிரப்படும்.ஆனால்,இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாண இராச்சியம் யாரால் அரசாளப்பட்டது,
நல்லூர் கந்தசுவாமி கோயில்கூட எந்த அரசனால் முன்னர் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு, பின்பு புதிதாகக்கட்டப்பட்டது என்ற உண்மை எம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?
யாழ்.வீரமாகாளி அம்மன் கோயிலின் பரந்த
வெளியிலிருந்து போர்த்துக்கீசருடன் போர்தொடுத்தானே ‘சங்கிலி மன்னன்’ என்ற வாசகத்தைப்படித்தபோது மெய்சிலிர்த்தது.
வீரமாகாளி அம்மன் கோயில் தெருவில் குடியிருந்த ‘குங்குலியர்’எனும் குருக்கள் மன்னனுக்கே ஆலோசகராக இருந்து,அறத்தையும்,எம்மக்களையும் காப்பாற்ற அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது என்பதையும்,
“இணையிலான்,இவன் யார்?
என்பதையும்,எம் வரலாற்றுக்குள் நாம் பட்ட வலிகளையும்,எமக்கான வரலாற்று உண்மைகளையும் கதைசொல்லி
மிக அனுபவரீதியாகவும்,உரையாடல்கள்
வழியாகவும்,கதையாடல்கள் வழியாகவும்
உணர்வுடன் எழுதி முடித்திருக்கின்றார்
என்பதுதான் என் பார்வையின் மெய்ப்பொருள்.
இப்படியான வரலாற்றுப்பொக்கிஷத்தில் இடையிடையே கதையோடு சங்கமிக்கும்
ஓவியங்கள் எம்மை அக்காலத்திற்கே கூட்டிச்சென்றது என்பதை வாசகர்களால்
இனி எப்போதுமே மறக்கமுடியாது.
“ஏன் இந்த வரலாற்று நாவல் இவ்வளவு கனமாக இருக்கின்றது,அந்த அளவிற்கு
இதற்குள் என்னதான் இருக்கப்போகின்றது?”
என்ற கேள்வி எனக்கும் ஆரம்பத்தில் எழுந்தது தான்.ஆரம்பத்தில் அறிமுகவுரை தொடங்கி, அணிந்துரைவரை 57 பக்கங்கள்
தேவைதானா?”என்பதை எவரும் கேட்டு விடலாம்.நான் ஒன்று சொல்வேன்,
“இணையிலானை வாசித்து முடித்ததும்;
இவையாவும் மறந்துபோவது மட்டுமன்றி;
கதைசொல்லியின் பார்வையில்;அவைகூடச்சரியே
என்ற அவரது உழைப்பின் கனத்தை நாமும் உணர்ந்து கொள்ளலாம்.
இப்படியொரு வரலாற்று நாவலை
எமக்குத் தந்து எம்மை வியக்க வைத்ததோடு நின்று விடாமல்
” இன்னும் பல வரலாற்று நாவல்களைப் படைப்புக்கள் ஆகவேண்டுமென்பதே”
எனது விருப்பம்
மிக்க நேயத்துடன்
லிங்கேஸ்வரன்,ஜேர்மனி.
