Review 3

இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்களின் படைப்பான இணையிலான் என்னும் வரலாற்று நாவல் 20-1-24 இல் சிட்னியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து பல வரலாற்று நாவல்கள் வெளி வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு நிலை ஈழத்தில் இருக்கவில்லை. இத்தகையதொரு பின்புலத்தில் இணையிலானை தனித்துவமான ஒரு படைப்பு எனலாம். மண்பற்று, மொழிப்பற்று, உள்ளுவது எல்லாம் உயர்வு என்பவற்றை இயல்பாகக் கொண்டுள்ள பாஸ்கர் ஒரு கடும் உழைப்பாளி கூட. அவருக்கு உள்ள சமூக வரலாற்று பிரக்ஞய இலக்கிய அறிவு, தெய்வ பத்தி, இவை பற்றிய தேடல் இந் நாவலுக்கு அடித்தளமாக அமைய, படைப்பு ஆற்றல், கற்பனா சக்தி என்னும் இரசவாதம் என்பன இணையிலானைத் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நாவலாக ஆக்கியுள்ளது. தமிழ் மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம், அவர்களின் வீரம், தியாகம், சோகம், என்பவற்றால் ஆட்கொள்ளப் பட்ட பாஸ்கர் அதனை வழி நடத்திய யுகபுருசனின் நிழலில் இணையிலானைப் புனைந்து உள்ளார். வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்தவர் மேதகு ….
மாற்றத்துக்கு தனி மனிதர்களின் குறுக்கீடு அவசியமாகின்றது. இதனால் தான் பெரும் புரடசிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப் பற்றி நாம் பேசிக் கொள்ளும்போது அவற்றை முன் நின்று நகர்த்திய ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனி மனிதர்களைப் பற்றி பேசிக்கொள்கின்றோம்.
மாற்றத்துக்குத் தனி மனிதர்களின் குறுக்கீடு அவசியமாகின்றது. இதனால் தான் பெரும் புரடசிகளை, விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப் பற்றி நாம் பேசிக் கொள்ளும்போது அவற்றை முன் நின்று நகர்த்திய ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க, தனித்துவம் மிக்க, தனி மனிதர்களைப் பற்றி பேசிக்கொள்கின்றோம்.
அவ்வாறான ஒரு தலைவனால் ஆகர்ச்சிக்கப்பட்ட பாஸ்கர் அவனின் நிகழ் காலத்தை பின்னோக்கி நகர்த்தி இணையிலானை படைத்துள்ளார்.
போர்த்துக்கேயர் இலங்கைக்குள் புகுந்த காலம் வடக்கே யாழ்ப்பாண இராச்சியம், அதன் மன்னர் சங்கிலியன் அவனின் படைத்தளபதியே இணையிலான்.
உண்மை வரலாறு நாவலின் களமாக அமைய, காலத்தின் தேவை கருதி, இதனோடு காதல், வீரம், பழிவாங்கல், காட்டிக் கொடுத்தல், சாகசங்கள் யாவும் புனையப்பட்டு, அந்த மண்ணுக்குரிய விழுமியங்களை நாவலில் மிகவும் இலாவகமாக காட்டுகின்றார். நாவல் முழுவதும் திருவிழாக்களும், பக்தி காட்சிகளும், தேவாரப் புகழ் பெற்ற கோவில்களும் மண்ணின் வாசனையை வீசிய வண்ணம் உள்ளது. அன்னியர் ஆட்சியில் ஏற்படும் அவலங்கள் நெஞ்சை நெருப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது. கூட இருந்தே குழி பறிக்கும் செயல்களால் ஏற்படும் அவலங்கள் நிகழ்கால நிகழ்வுகளை வாசகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது.
வரலாற்று நாவலைப் படைப்பது என்பது ஒரு கத்தியின் முனையில் நடப்பது போன்றது. இணையிலான் நாவலில் சில இடங்களில் வரலாறு நாவலை மிஞ்சி நிற்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகிறது. வரலாற்றுப் புனைவு என்பது கல்லை வைரமணி யாக்கும் ஒரு இரசவாதம்.
ஆனால் இது ஒரு காலத்தின் தேவை. உறங்கி கொண்டிருப்போரை எழுப்பும் ஆலயமணி. சம காலத்திற்கு கடத்தப் பட வேண்டிய வரலாற்றுக் கடமை. பாஸ்கர் அதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார். மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தனியே நிற்கின்றார்.
மயில்வாகனம் தன பாலசிங்கம்

Leave a Comment